புதன், 25 அக்டோபர், 2017

அமுதும் நஞ்சும்

தமிழ்த் தேசியம் நிர்வாணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. என்னதான் போதிசத்வர் நார்த் இண்டியன் என்றாலும் சித்தர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தத் தேசியத்தில் இருந்த வகையில் மகா நிர்வாணத்தை நோக்கி இது நகரும் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, சினிமா என்று ஒரு மாயையில் இத்தேசியம் சிக்குறும் என்பதும், அது மகாவைக்கூட நிர்வாணமாக்க முயலும் என்பதும். நிர்வாணமே சாத்தியமில்லாதபோது மகாநிர்வாணம் எப்படி சாத்தியமாகும்?

நிர்வாணம் மிகமிக அழகானது அல்லது மிக மிக அசிங்கமானது. அதை எந்த வகைமையில் சேர்க்கலாம் என்பது சம்பந்தப்பட்ட உடலைப் பொறுத்தே அமைகிறது. சிங்கத்தின் நிர்வாணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது! அதே நேரத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவின் நிர்வாணம் முழுமையாக உங்களுக்குக் காணக் கிடைத்தால் அது கண்டிப்பாக, கவர்ச்சிக்கு பதிலாகக் குமட்டலையே ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் க்ளிவேஜின் பிதுங்கலில் உள்ள கவர்ச்சி, தொய்ந்த மார்பகங்களிலும் இடுப்புச் சதைகளிலும் இல்லவே இல்லை. இதுவே சினிமாவின் அடிப்படை மொழி!

Irreversible என்று ஒரு படம். படம் முழுக்க முழுக்க காமத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் முதல் காட்சியில் எண்பது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவர் தனிமையின் அறையில் காமத்தின் பிடியில் கையறு நிலையில் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கிறார். எமது தமிழ் சினிமாவில் இவ்விதமான நிர்வாணத்தைக் காட்ட யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா? அது கூட வேண்டாம், மிக அழகான யுவதியொருத்தியாகவே அது இருக்கட்டும், அவளை நிர்வாணமாகக் காட்ட இங்கே யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? அவர்கள் யாருக்கு பயப்படுகிறார்கள், சம்பந்தப்பட்ட நடிகைக்கா, சென்சாருக்கா, பார்வையாளனுக்கா, பெண்ணியவாதிகளுக்கா அல்லது தங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கா?

உண்மையில் அவர்கள் பயப்படுவது தங்களுக்குள் உட்கார்ந்திருக்கும் வியாபாரிக்குத்தான். முழு நிர்வாணம் வெளிப்படுத்தப்படுவது முதல் ரீலிலேயே க்ளைமாக்ஸ் வந்துவிடுவதைப் போன்றது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். சினிமாவைக் கலையாகப் பார்க்க இங்கே ஒரு நாதியும் இல்லாததே இதற்கான காரணம்.

ஆதாம் ஏவாள் கதையைத் தமிழில் எடுக்க நேர்ந்தபோது (தமிழ்நாடு எந்தக் கண்டத்தில் இருக்கிறது என்கிற பிரக்ஞையில்லாத காரணத்தால் நேர்கிற அவஸ்தை இது) அபிலாஷா என்று ஒரு நடிகை இவ்விதமாக நடிக்க முன்வந்தார் என்பதாக பரபரப்பாக ஒரு கலவர காலம் இருந்தது. Nuditiy என்பதற்கும் Hardcore sex என்பதற்கும் ஊடான இடைவெளியை ஒருபோதும் உணராத தமிழன் திரும்பத் திரும்பக் காயடிக்கப்படுகிற கண்ராவி இது. ஆஞ்சலினா ஜோலியும் ஆன்டோனியா பென்டாரஸும் Original Sin படத்தில் உறுப்புகள் மட்டும் காட்டப்படாத டபுள் எக்ஸ் ஹார்ட்கோர் காட்சியில் மிக லாவகமாக நடித்திருப்பார்கள். அது அவர்களின் கலாச்சாரம் என்று கதைப்பவர்களை ஒதுக்குங்கள், உங்கள் கலாச்சாரம் மட்டும் கலவியில் ஈடுபடுவதைப் பாவம் என்றா சொல்கிறது! அப்புறம் கலாச்சாரக் காவலர்கள்கூட பிறக்க வகையில்லாது போகும் என்பதை மறந்துவிடக்கூடாது!

படிப்பு, வேலை, ஆடை என்று அத்தனை விதத்திலும் வேறு கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொண்டாயிற்று. செல்போன்கள் என்கிற பெயரில் நாடெங்கும் ஹிடன் கேமராக்கள் அலைகின்றன. தனது புணர்வு நிகழ்வைத் தானே பார்க்க ஒரு பெண் ஒப்புவாளா என்கிற நிலைப்பாடு இப்போது மாறுபடுகிறது. Sliver எனும் ஹாலிவுட் படத்தில் ஷெரான் ஸ்டோன் இவ்விதமாக தன் முந்தைய நாளிரவில் தானறியாமல் பதிவு செய்யப்பட்ட டேப்பை மிகுந்த ஆசையோடு பார்க்க நேர்வதாக வந்தபோது நாமுணர்ந்த அதிர்ச்சி இப்போது இருக்கிறதா?

காதலனோடான முயக்கத்தை முழுப் பிரக்ஞையோடு படமாக்க ஒப்பும் எமது காதலிகள் வஞ்சகமாகவோ ஒப்புதலோடோ இன்டர்நெட்டில் கொட்டி வைக்கப்பட்டுள்ள காலத்திலிருந்து இதை எழுதுவதில் நான் எந்தத் தயக்கமும் கொள்ளவேண்டியதில்லை.

கோவில் சிலைகளில் கண்ட நிர்வாணங்கள் அந்த உடல்களின் வடிவ அழகையே நுகரவைத்திருந்தன. ஏனென்றால் அந்தமாதிரி உடல்கள் நிகழ்காலத்தில் அபூர்வமாகவே எதிர்ப்படும். அல்லது எதிர்ப்படவே படாது! பிற்பாடு ஜனரஞ்சக வார இதழ்களில் ஜெயராஜ் என்றொரு ஓவியர் அறிமுகமாகி ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்த முனைந்தார். அதாவது அவர் வழக்கமாக நிர்வாணமாக ஒரு உருவத்தை வரைந்துவிடுவார். அதன் ஷேப்பிற்கு எவ்விதமான பங்கமும் வராதவண்ணம் அதன்மீது புடவையோ, சல்வாரோ, ஜீன்ஸோ, டீஷர்ட்டோ இருப்பது போல ஒருசில கோட்டுவித்தைகள் புரிவார். பார்க்கவே ஆசை ஆசையாக இருக்கும். பனியன் வாசகங்களின் தமிழ்த்தேய மூதாதை அவர்! அந்த வாசகங்களும் ஓவியங்களும் அந்த நாட்களில் எவ்விதமான ஈர்ப்பை ஏற்படுத்தினவோ அதைத்தான் இப்போது தமிழ் சினிமா காஸ்ட்யூமர்கள் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (இதனால்தான் ஜெயராஜை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பத்திரிகைகள் நிஜ உடல்களின் டிஜிட்டல் பிரதிகளை பக்கத்துக்குப் பக்கம் நிரப்புகின்றன.) அதாவது இரண்டு அல்லது மூன்று சைஸ் சின்ன உடையாகத் தைப்பது அவர்களின் வழக்கமாகிவிட்டது. திணிப்புகள் வேறு கதை. ஆனால் நடிகை ஓடிவருகிற காட்சியானால் அப்படியே தலைகீழ். உள்ளாடை வரைக்கும் இரண்டு சைஸ் பெரியதாக இருக்க வேண்டும். இல்லையானால் பார்வையாளனின் பார்வைக்கு விருந்தில்லாது போகும்!

நமீதாவாகட்டும், நேரெதிர் ஒல்லிப்பிச்சான் நடிகையாகட்டும், க்ளிவேஜ்களின் அதிகபட்ச ஆழம், தொடைகளின் அதிகபட்ச உயரம், தொப்புளுக்குக் கீழே மேக்ஸிமம் இன்ச் என்றுதான் எமது காஸ்ட்யூமர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, அவர்களுக்கு முற்றிலும் வேலையில்லாமல் போகும்விதமாக ஆகிவிடக்கூடாதே; அப்புறம் அவர்களின் பிள்ளை குட்டிகளின் கதி என்னவாவது என்பதாக எமது சினிமா கொண்டிருக்கிற அக்கறை இருக்கிறதே, அது அதி உவப்பானது அதற்கும் பங்கம் வரும்போது காஸ்ட்யூமர்கள் கண்டிப்பாக நிர்வாணத்தைத்தான் எய்த வேண்டும்!

இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அயோக்கியத்தனம் என்னவென்றால், அரை நிர்வாண ஸ்டில்களின் தயவால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அதே வணிக இதழ்கள்தான், ஒரு நடிகை நிர்வாணமாக நடிக்கலாம் என்று யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் யோசித்தால்கூட நிர்வாண நடிகை, ஆபாச நடிகை என்றெல்லாம் அவதூறு பரப்ப ஆரம்பித்துவிடவும் செய்வது! ஏனென்றால் நிர்வாணம் பழகிவிட்டால் வேறு எதைக்கொண்டும் அவர்களால் பத்திரிகை நடத்த முடியாது. இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா என்று கேட்பார் இல்லவே இல்லை.

சேதுவில் அறிமுகமான அபிதா, ஒரு மலையாளப் படத்தில் கதைத் தேவைக்காக நடித்த ஒரு சாதாரணக் காட்சியை, நிர்வாணக் காட்சி என்று வரையறுத்து அந்தப் பெண்ணை ஃபீல்டை விட்டே ஓட்ட முயன்றதும் சினிமாக்காரர்கள் அல்ல, பத்திரிகைக்காரர்கள்தான்! அட்டை இல்லாமல் பத்திரிகை வந்தால் எவ்வளவு அசிங்கமாக இருக்குமோ அவ்வளவு அசிங்கம் ஆடை இல்லாத பெண் என்பதைப்போன்ற மூளைச்சலவையை அவை தொடர்ந்து செய்தே வருவதும் சினிமாக்காரர்கள் நிர்வாணத்தை நினைத்து நடுங்குவதற்கான உபாயமாகிப்போகிறது.

ஜம்பு எனும் பழைய திரைப்படத்தில் ஜெயமாலா எனும் நடிகை வெற்று மார்பில் ஒற்றை முந்தானையைப் போட்டுக்கொண்டு தண்ணீரில் நனைகிற காட்சி தமிழின் அறுந்த ரீலாக அறியப்படுவது! ஏனென்றால் முலைக்காம்புகள் அதுவரை தமிழனுக்கு தமிழ்த்திரையில் காணக் கிடைத்ததேயில்லை. அந்தக் காட்சியோடு இந்தியில் ராஜ்கபூரின் ராம் தேரி கங்கா மெய்லி திரைப்படத்தில் மந்தாகினி நீரில் நனைந்த காட்சியை ஒப்பிட்டு நோக்கின், படைப்பாளனின் நேர்மை விளங்கும். ஜம்பு திரைப்படத்தில் இயக்குனர் கம் காமிரா மேன் கர்ணன் முலைக்காம்பைக் காட்சிப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டிருப்பார். ஆனால் ராஜ்கபூரின் கதை வேறு. முலைக்காம்புகளின் அழகால் வசீகரிக்கப்பட்ட கலாமனம் அவருடையது! தேர்ந்த பார்வையாளனால் இந்த வித்தியாசத்தை எளிதில் உணர முடியும்.

கேமராவுக்கு முன்னால் உள்ளாடை அணிந்த நிலையில் இரு துடைகளையும் விரித்துக்காட்டிய எமது கவர்ச்சி நாட்டிய நடிகைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காலம் இப்போது இல்லை. ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இதைச் செய்ய வேண்டிய காலகட்டம் இது. இதைவிடவா முலைக்காம்புகளின் வசீகரம் அசிங்கமானது? பாரதிராஜாவின் முதல் மரியாதையில் நமக்கு ஏற்பட்ட தவிப்பு ராஜ்கபூரின் சத்யம் சிவம் சுந்தரத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. இதிலிருந்து இயக்குனரின் பார்வையைக் கொண்டுதான் பார்வையாளனால் படத்தைப் பார்க்க முடிகிறது என்பதையே நாம் உணர வேண்டும்.

தற்போது வேலு பிரபாகரன் ஒரு சிறுமியை நிர்வாணமாகக் காட்டப்போகிறார் என்று ஒரு செய்தி பத்திரிகைகளுக்கு உவப்பாக இருக்கிறது. வேலு வழங்கிய தாராள ஸ்டில்லை அப்பட்டமாக வெளியிடுகிற அதே ஆசிரியர் குழு, கட்டுரையின் ஊடாக அவரது முயற்சியை நையாண்டி செய்யவே விரும்புகிறது. ஏதோ உங்கள் விருப்பத்துக்காக ஒரு ஸ்டில்லைக் கொடுத்துவிட்டோம், எங்கள் விருப்பமோ அதற்கு நேர்மாறானது என்பதைப்போல ஒரு மாயையை அவை நிறுவ முயல்கின்றன. மனதாலும் பிழை விழையான் என்கிற போர்வையைப் போர்த்தியவாறு பக்கத்து வீட்டு பாத்ரூமில் எட்டிப்பார்க்க விளைகிற ஆசை இது.

ஏனென்றால் நிர்வாணத்தைப் பார்க்கவே எல்லோரின் மனமும் விளைகிறது. ஆனால் பார்ப்பதைப் பிறர் அறிந்துவிடலாகாது செக்ஸ் படங்கள் என்பதாக அறியப்படுகின்ற சில படங்களை வெளியிடுவதற்கென்றே பல்வேறு திரையரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றன. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வயது வித்தியாசமில்லாமல் சலூன்கள் போல ஆண்கள் மட்டும் அங்கே போகிறார்கள்.

ஆரம்பத்தில் செக்ஸ் படங்கள் என்றாலே மலையாளப்படங்கள் என்பதைப்போன்ற மாயை இருந்தது. உண்மையில் அவளுடெ ராவுகள், மழு ஆகிய படங்கள் அவ்வகையினவை என்பதாக நாம் நம்பினோம். உண்மையில் அவளது இரவுகள் என்பதாகப் பொருள்படும் அவளுடெ ராவுகள் ஒரு க்ளாஸ் ஃபிலிம். இயக்குனர் ஐவிசசி வாயிலாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீமா நமது ஷோபாவுக்கு இணையான பர்ஃபார்மென்ஸில் அசத்தியிருப்பார். ஆனால் உள்ளாடைகள் இல்லாத நிலையில் நாயகனின் ஒற்றை சட்டையை அணிந்து அவர் வலம் வரும் ஒரு காட்சிக்காகவே சுட்டாலும் மலையாளம் வராத தமிழர்களால் திரும்பத்திரும்பப் பார்க்கப்பட்டு, படம் சக்கைப்போடு போட்டது. வெறும் சட்டையை மட்டும் அணிந்து அதன் கீழ் மடிப்பை உயர்த்தி தொடையைப் பரிசோதிக்கும் சீமாவின் ஸ்டில் மௌண்ட் ரோட்டில் விபத்துகளை நிகழ்த்தியது.

மழுஎன்றால் மலையாளத்தில் மட்டுமல்ல, நல்ல தமிழிலும் கோடாரி என்பதுதான் அர்த்தம். அந்தப்படத்தை மாமனாரின் இன்பவெறி என்று தமிழ்ப்படுத்திய வக்கிரம்தான் ஆபாசமே தவிர, அந்தப்படம் ஆபாசமானதல்ல.

ஆனால் இவை காட்டிய திசையில் பிற்பாடு வெளிவந்த செக்ஸ் அல்லது பிட் படங்கள் மலையாளப் படங்கள் என்பதாகவே நாம் அறிந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஷூட் செய்யப்பட்டது கோடம்பாக்கத்தில்தான்! இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த அவதூறைத் தாண்டித்தான் மலையாளப்படம் சிலிர்த்தெழுந்தது. இங்கே அதுமாதிரி எதுவும் நிகழவேயில்லை.

சிமி அகர்வால், அனு அகர்வால் என்று ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலப் படங்களிலும் ஒரு சில ஆடை துறந்த நிலைப்பாட்டை வட இந்திய நடிகைகள்தான் முயன்றார்கள். இருந்தாலும் நமது தமிழில் துணிந்த தவமணிதேவியையும் நாம் மறந்துவிடக்கூடாது.  அப்புறம் அரங்கேற்றத்தில் பிரமீளாவின் முதுகும் அதன்மீது தூவப்பட்ட ரூபாய் நோட்டுகளும் எவ்விதமான அதிர்ச்சியை பார்வையாளர்களுக்கு ஊட்டவேண்டும் என்று இயக்குனர் விரும்பினாரோ அதை நல்கவே செய்தது.

கமலஹாசன் ஆசைப்பட்ட மருதநாயகம் வந்திருந்தால் ஓர் ஆண்பிள்ளை நிர்வாணம் தமிழ்ப்பெண்டிருக்குக் காணக் கிடைத்திருக்கும்! என்ன செய்வது, அவர்கள் வாங்கிவந்த வரம் அவ்வளவுதான்! ஆனாலும் ஆர்ப்பாட்டமாகத்தான் அக்காட்சி இருந்திருக்கும்! மம்முட்டியை சூப்பர்ஸ்டாராக்கிய யாத்ரா எனும் பாலுமகேந்திராவின் மலையாளப்படம் திரும்பவும் கன்னடத்தில் அவராலேயே எடுக்கப்பட்டபோது அதில் பானுச்சந்தர் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருப்பார். எந்த உறுத்தலும் இருக்காது. இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

பெண்களைப் பொருத்தவரை தவமணி தேவிக்குப் பின்னுதாரணங்கள் ஏன் சொல்ல இயலவில்லை என்றால், பிழை, மீடியாக்கள் முதலான குறுகலான பார்வை கொண்ட சமூகத்தின் வசம்தான் இருக்கிறது என்பதே நாம் கண்டடைவது!

இருந்தாலும் திரையைக் கிழித்துக்கொண்டு நிர்வாணம் வெளிப்படப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. பாவம், காஸ்ட்யூமர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும

நன்றி.
சுதேசமித்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக