விறியாத சிறகுகள் ....
------------------------------------
"கரை காணா கடலலை மேலே
மோகப் பூங்குருவி பறந்து....
அரபிப்பொன்னின் திளக்கம் தேடி....."
கரை காணமுடியாத கடல் அலைகளின் மேல் ஆசையெனும் குருவி ,அரபு நாட்டு மின்னும் திரவியத்தை தேடி பறக்கிறது... என்ற பாடல் சாமானியனான நடுத்தர வர்க்கதினருக்காக எழுதப்பட்டது என நினைக்கிறேன்.
குடும்பத்தின் பொருளாதாரப்பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தையும், நட்பையும் , சொந்தபந்தங்களையும் விட்டுவிட்டு கொடும் சூடில் மணலாரண்யத்தில் தன் இரத்தத்தை தண்ணீராக இரைத்து துச்சமான கூலியில் வேலை செய்யும் நம் சகோதரர்களின் முகத்தில் ஆயிரமாயிரம் சோகக்கதைகள்இருக்கின்றன.
தாய் இறந்த சேதி அறியாதவர்கள்.....
உற்றவரின் மரணத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள்.......
பிறந்த குழந்தையின் முகம் காண முடியாதவர்கள்......
மனைவியின் ஆசை,கோப வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள்......
சகோதர சகோதரிகளின் நல்லது கெட்டதுகளுக்கு பங்குகொள்ள முடியாதவர்கள்.....
இப்படி பல இழப்புகளை இழந்து
நடைபிணமாய் ....
வேலை...வேலை....வேலை...
இவர்களின் உழைப்பை உறிஞ்சும் அட்டைப்புச்சிகளைப்போல்இருக்கும் கம்பனிகள்..சரியான சம்பளமில்லாமல் உணவில்லாமல் தங்கும் வசதியில்லாமல்......!
அரபு நாட்டில் செய்யும் வேலையில்
ஐம்பது சதவீதம் நம் தாய் நாட்டில் செய்திருந்தால்....?
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....
ஏன் கையேந்த வேண்டும் வெளி நாட்டில்....என்று அய்யா கவிஞர் மருதகாசி எழுதியது எவ்வளவு உண்மை.தாய்நாட்டில்
சுதந்திரக்காற்றை அனுபவித்தவனுக்கு... அரபு நாட்டில்
அடைபட்டுக்கிடக்கும் குளிரூட்டப்பட்ட அறையில் சுதந்திரக்காற்று எந்தமாதிரியான ஆனந்தத்தை தரும்?.
திரவியம் எல்லா இடத்திலும் இருக்கிறது.... அதை எப்படி எங்கே எந்த இடத்தில் பெறுவது தான் தலையாய பிரச்சனை.
ஆங்கிலத்தில்"Money is always there.but pocket is change."என்று ஒரு வாக்கியம் உண்டு.
திரவியம் என்ற பணம் எங்கேயும் போய்விடவில்லை.இருக்கும் இடத்தில் தான் இருக்கிறது.அதைத்தேடி எடுப்பவன் தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறான்
ஒருவன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைத்து தேடுகிறான்
வேறொருவன் உழைக்காமல் தேடுகிறான்.மற்றொருவன் சனாதன தர்மம் மறந்து பொய்பித்தலாட்டம் செய்து தேடுகிறான்.இன்னொருவன் அடுத்தவனின் உழைப்பைத்திருடி தேடுகிறான்.ஆக ஏதோ ஒருவழியில் ஒவ்வொருவரும் பணத்தை தேடுகிறோம்.இதில் ஏழு தலைமுறைக்கும் சேர்த்துவைத்தவனுண்டு.அடுத்தவேளைக்கு சேர்த்து வைக்காதவனும் உண்டு.
இந்த சமூகத்தில் தன்உடல் உழைப்பை மட்டும் நம்பி குடும்பம் நடத்துபவனை விரல் விட்டு எண்ணிவிடலாம்..(விவசாயியையும் மீனவனையும் விட்டுவிடுங்கள் காரணம், ஆதிகாலம் முதலே தன் உடலை வருத்தி உழைத்து தன் உணவைத்தேடிக்கண்டவர்கள்.) மீதமுள்ளவரனைத்தும் ஏதோ ஒருவழியில் சமூகத்தை யும் மனசாட்சியையும் வஞ்சித்துவிட்டுதான் பொருள் சேர்க்கிறார்கள்.
வியாபாரிக்கு உடல் உழைப்பு தேவையில்லை.அது பண்டமாற்று முறையில் ஒன்றை வாங்கி ஒன்றைகொடுப்பது.ஏமாற்ற வழியுண்டு.முதலாளியாக இருப்பவன் கூலியாக இருப்பனை வஞ்சிக்கலாம்.
மேலதிகாரி தனக்கு கீழே இருக்கும் குமஸ்தனை வஞ்சிக்கலாம். ஆன்மீகவாதி இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி பாமரனை வஞ்சிக்கலாம். தன்னை கடவுளென்று சொல்லி அப்பாவிகளை ஏமாற்றலாம்.
ஆட்சியாளன் அறம் தவறி பாமர மக்களை வஞ்சனை செய்யலாம்.
ஆக பணம் ஈட்டுவதென்பது உடலுழைப்பைச்சாரமல் இந்தவழிகளிலும் ஈட்டலாம் என்ற எண்ணத்தை தலைமுறை தலைமுறையாக அந்தந்த தொழில்செய்பவர்கள்... சொல்லாமல் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.
நவயுகத்தில்,திருடுவது,ஏமாற்றுவதுநம்பிக்கைத்துரோகம் என்பதெல்லாம் தவறில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
விபச்சாரி கூட தன் உடலை விற்று நேர்மையாக பணம் ஈட்டுகிறாள்.விற்பதற்கு தன் உடலைத்தவிர வேறொன்றுமில்லை அதில் கள்ளத்தனமில்லை.ஆனால் அது தவறாக சித்தரிக்கப்படுகிறது.
ஆட்சியில் இருப்பவனோ....
அதிகார மோகம்.
அதிகார அகந்தை
அதிகார போதை
இன்னும் வார்த்தைக்குள் அடங்காத கீழ்த்தரமான குணங்களை கொண்டவனை ஆராதிப்பவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது..
ஆட்சியாளன் நியாய அநியாங்களை சீர்தூக்கி பார்த்து நேர்மையான நல்லாட்சி செய்பவனாக இருந்திருந்தால்.........
தன் பிரஜைகளின் க்ஷேமங்களில் கவனம் செலுத்தியிருந்தால்...
பாரதத்தை விட்டு எந்தப்பறவையும். பறக்கத்துணிவதில்லை...
அன்புடன் : ஜோசப் ஜோபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக