திங்கள், 5 நவம்பர், 2018

என் பாதையின் வழியே

இந்த சின்ன நகரத்துக்குவந்து இருபத்திஇரண்டு வருடங்கள்  முடியப்போகிறது. எனக்கான  உலகத்தை கட்டமைப்பதும் அதை களைவதுமாய் நாட்கள் கடந்துவிட்டன, இந்த இருபத்தி இரண்டு வருடத்தின் நாட்காட்டி வெறுமையால் நிரம்பிகிடக்கிறது. இலக்கியமும்,அனுபவமும் ,கனவுகளும்,பாடங்களும் அர்த்தமில்லாத சந்தோஷங்களையும்,வலிகளையும் மட்டுமே  பரிசளித்திருக்கிறது. ஒரு போதும் இவை சோறு போடுவதற்கான வழிகளை திறக்கப்போவதில்லை என்பதை நன்கு உணரமுடிகிறது. இருந்தும் இலக்கியமும், எழுதவேண்டுமென்ற ஆர்வமும் பெரும் விலங்காய் என்னை துரதிக்கொண்டேயிருக்கிறது தப்பிக்க வழியற்று ஒடிக்கொண்டேயிருகிறேன். எனக்கான கற்பனை உலகம் என்னை தனிமை படுத்தினாலும், என்னை கடித்து தின்றாலும் கையில் ஏந்தி கொள்வதற்கு என்றுமே  என் மனைவி தன் கைகளை விரித்தே வைத்திருக்கிறார். எத்துனைத்தான் நான் தனிமையை காதல்கொன்டாலும் மனம் ஒரு நொடியேனும் மனைவி பிள்ளைகளை நினைக்கத்தான் செய்கிறது, அவர்களின்றி என் வாழ்க்கை வெறுமையானதாய் மட்டுமே இருக்கும். நம்பிக்கை சிதைந்துப்போன நிலையில் இதை எழுதிக்கொண்டிருகிறேன். ஏமாற்றம், துரோகம், வஞ்சம், பொறாமை இவைகள் மட்டுமே நிரம்பிய என் உலகில் இன்னும் சிறிதேனும் காதலும், கனவுகளும்  இருக்கவே செய்கிறது. நீண்டக்கால தோழிகள், எதிர்பாராமல் முறிந்த உறவின் காயங்கள், பெயர் சூட்ட முடியா உறவு,மௌனமான காதல், இயலாமையை,கோபத்தை எழுத்து மூலம் வெளிபடுத்தியதால் கிட்டிய நண்பர்கள்,முகநூலில் கிடைத்த தோழமைகள், உதவிகள்,  இப்படி எல்லாம் நிறைந்துள்ளது என் வாழ்க்கை.
    தனியாளானான பேருந்துப்பயணம், அதிகாலை கடற்க்கரை, வழி தெரியா சாலையில் தனியாக அலைந்தது, கதை  எழுதுபவன் எனும் பொய்யான அடையாளத்தைகொண்டு சிற்ப கலைஞன் ஒருவரின் கதை கேட்டது, யாரிடமும் சொல்லாமல் இரண்டு நாள் முழுதும் தனியாக திருவனந்தபுரம் சாலைகளில் அலைந்து திரிந்தது கையில் காசு இல்லாமல் பட்டினியாய் அலைந்தது,கையில் இருக்கும் காசுக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கியது. வைசாலி படம் பார்ப்பதற்காக தியேட்டர் வாசலில் ஒருநாள் முழுவதும் காத்துக் கிடந்தது இப்படி நானாய் வாழ்ந்த சில தருணங்கள் நியாபக இடுக்குகளில் படிந்தே கிடக்கின்றன. மிகுதியனா தருணங்களில் நானும் ஓட்ட பந்தய குதிரையாய் எதற்கு ஓடுகிறேன் என தெரியாமல்  ஓடிகொண்டேயிருந்தேன்.  அறை சுவர்கள் என்றைக்கும் கழுத்தை நெரித்து கொண்டே இருக்கின்றன, நான் காதலித்த தனிமை மிக பெரிய எதிரியாக நிற்கிறது
தனிமையின் வலியை உணர்த்துவதற்கு பெரிதாக எதுவும் தேவை இல்லை,பழைய நினைவுகளே போதும். எல்லாவற்றுக்கும் ஏங்கி ஏங்கியே இருபத்தி இரண்டு வருடம் முடிய போகிறது. இருந்தும் இந்த கேரள மண் மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு விடியலும் ஏதோஒன்றை மறைத்து வைத்தே விடிகிறது.எத்துனை விதமான மனிதர்கள்,  எத்துனை  கனவுகள் , நினைவுகள் பசுமையானவை விரும்பும்போது மீட்டெடுக்க நமக்காய் என்றும் காத்துகிடப்பவை.சில நினைவுகள் வலியை மட்டுமே மனது முழுவதும் நிரப்பினாலும் நாம் அதை மனதோடு நெருக்கமாகவே வைத்து கொள்கிறோம்.மறக்க நினைத்தாலும் அந்நினைவுகள் அடி மனதில் துடித்து கொண்டே தான் இருக்கும். உண்மையில் எந்த வலியும் மரத்து போவதோ உறங்கிபோவதோ இல்லை. நாம் தான் மறைத்து வைத்திருக்கிறோம். என்றைகாவது அது அடி மனதில் இருந்து எழுந்து மேலோங்கி நிற்கும்.நினைவுகளை மீட்டு எடுக்கும் கருவி  எதுவாக வேண்டுமெனிலும் இருக்கக்கூடும். அப்பாவின் கையைபிடித்து பள்ளிக்கு போகும் குழந்தையோ, மூட்டை தூக்கும் கிழவனோ, மீதி இருக்கும் உயிரை மட்டும் இறுக்கி பிடித்து சாலை ஓரத்தில்  உறங்கிகொண்டிருக்கும் மனிதனோ, வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி பார்வையிலிருந்து கடைசி துளியாய் கரையும் வரை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்து செல்லும் குடும்பமோ இல்லை.நீண்ட நாள் கழித்து கையில் அகப்பட்ட அந்த புத்தகம். பழைய புத்தகங்களை, பழைய  பரிசுகளை  மீண்டும் மீண்டும் அரவனைதுக்கொள்வது   ஒரு அழகியல் என்றாலும் கூட என்றைக்கும் அது மகிழ்ச்சியை மட்டும் தருவது இல்லை. நம்மால்  மட்டுமே உணர கூடிய புன்னகையுடன்  ஒரு சில கண்ணீர் துளிகளையும் பரிசாக தருகிறது

தீபாவளி என்றுமே ஒரு பசுமையான நினைவுகளை தந்திருக்கிறது ஒரு பத்து வருடத்திற்கு  முன்பு இருந்த தீபாவளிக்கும் இன்றைய காலகட்டத்தில் வரும் தீபாவளிக்கும் நிறையவே வித்தியாசங்கள் இந்த புதிய தீபாவளியை வரவேற்கவுமில்லை கொண்டாடவுமில்லை.

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக