திங்கள், 5 நவம்பர், 2018

சூர்யா ஸென் Surya zen


சுஸ்மிதா சென் தெரியும்... ரியா சென் தெரியும்... ரியா சென்னோட அம்மா மூன் மூன் சென் கூட தெரியும்... இன்னும் கொஞ்ச பேருக்கு கூடுதலா அமர்த்தியா சென் தெரியும்....

சூர்யா சென் யாருன்னு தெரியுமா???

இன்னிக்கு நாம எல்லோருமே கொண்டாடுற அன்றைய தீவிரவாதி (???- ஆங்கிலேய அரசாங்கம் அப்படித்தான் சொன்னுச்சு) சுபாஷ் சந்திரபோஸ் "இந்திய தேசிய ராணுவம் " (INA) ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே "இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி" அப்படின்ற சுதந்திர போராட்ட குழுவ அமைச்சவர்தான் இந்த சூர்யா சென்...

சூர்யா சென் ஒரு வாத்தியார்.. அதனால அவர எல்லோரும் "மாஸ்டர்தா"ன்னு சொல்வாங்க... காந்தியடிகளோட அமைதி வழி போராட்டத்தால் சுதந்திரம் வாங்க முடியாது.. வெள்ளைக்காரங்கள அடிச்சு தான் தொரத்தனும்.. அப்படின்னு ஒரு நோக்கத்தோட தன்னிடம் படிச்ச மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆயுத போராட்ட குழுவ ஆரம்பிச்சார்.. அதுக்கு ஆளுங்கள எப்படி தேர்ந்தெடுத்தார் தெரியுமா??

ஒரு நாள் நடு ராத்திரி ஒரு சுடுகாட்டுக்கு வந்து தன்னை சந்திக்க சொன்னார்.. அப்படி யாருக்கேலாம் நடுராத்திரில சுடுகாட்டுக்கு வர தைரியம் இருந்துதோ.. அவங்கள எல்லாம் சேர்த்தார்.. மொத்தம் 63 பேர் சேர்ந்தாங்க.. ஓரிரு பெண்கள் உட்பட...

வெள்ளைகாரன அடிச்சு துரத்த நம்மூர்ல இருந்த போர்கருவிகளான ஈட்டி, வாள் எல்லாம் ஒத்துவராது... நமக்கும் துப்பாக்கி வெடி மருந்து எல்லாம் வேணும்னு முடிவு பண்ணி , வெள்ளைக்காரங்களோட ஆயுதக்கிடங்க கொளையடிக்க திட்டம் போட்டாங்க...

ஒரு லீவு நாள்ல அந்த கொல்லைக்கு நாள் குறிச்சு சிட்டகாங் அப்படின்ற இடத்துல இருந்த ஆயுத கிடங்குமேல தாக்குதல் நடத்தினாங்க... ஆனா துரதிஷ்டவசமா அந்த தாக்குதல்ல எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல..

அப்புறம் சிலபல ஒளிவு மறைவு யுத்தங்களுக்கு பிறகு சூர்யா சென் அப்படின்ற அந்த மாபெரும் போராளிய ஆங்கிலேய அரசாங்கம் கைது பண்ணி நகத்தை எல்லாம் புடுங்கி, பல்ல எல்லாம் புடுங்கி வங்காளத்துல இருந்த சௌலியாகஞ்ஜ் ஜெயில அடைச்சு வச்சு 1934- ஜனவரி மாதம் 12 ம் தேதி தூக்குல போட்டுட்டாங்க... அப்படி தூக்குல போட்ட உடம்ப கூட வங்காள விரிகுடா கடல் ல வீசிட்டாங்க.

என் பாதையின் வழியே

இந்த சின்ன நகரத்துக்குவந்து இருபத்திஇரண்டு வருடங்கள்  முடியப்போகிறது. எனக்கான  உலகத்தை கட்டமைப்பதும் அதை களைவதுமாய் நாட்கள் கடந்துவிட்டன, இந்த இருபத்தி இரண்டு வருடத்தின் நாட்காட்டி வெறுமையால் நிரம்பிகிடக்கிறது. இலக்கியமும்,அனுபவமும் ,கனவுகளும்,பாடங்களும் அர்த்தமில்லாத சந்தோஷங்களையும்,வலிகளையும் மட்டுமே  பரிசளித்திருக்கிறது. ஒரு போதும் இவை சோறு போடுவதற்கான வழிகளை திறக்கப்போவதில்லை என்பதை நன்கு உணரமுடிகிறது. இருந்தும் இலக்கியமும், எழுதவேண்டுமென்ற ஆர்வமும் பெரும் விலங்காய் என்னை துரதிக்கொண்டேயிருக்கிறது தப்பிக்க வழியற்று ஒடிக்கொண்டேயிருகிறேன். எனக்கான கற்பனை உலகம் என்னை தனிமை படுத்தினாலும், என்னை கடித்து தின்றாலும் கையில் ஏந்தி கொள்வதற்கு என்றுமே  என் மனைவி தன் கைகளை விரித்தே வைத்திருக்கிறார். எத்துனைத்தான் நான் தனிமையை காதல்கொன்டாலும் மனம் ஒரு நொடியேனும் மனைவி பிள்ளைகளை நினைக்கத்தான் செய்கிறது, அவர்களின்றி என் வாழ்க்கை வெறுமையானதாய் மட்டுமே இருக்கும். நம்பிக்கை சிதைந்துப்போன நிலையில் இதை எழுதிக்கொண்டிருகிறேன். ஏமாற்றம், துரோகம், வஞ்சம், பொறாமை இவைகள் மட்டுமே நிரம்பிய என் உலகில் இன்னும் சிறிதேனும் காதலும், கனவுகளும்  இருக்கவே செய்கிறது. நீண்டக்கால தோழிகள், எதிர்பாராமல் முறிந்த உறவின் காயங்கள், பெயர் சூட்ட முடியா உறவு,மௌனமான காதல், இயலாமையை,கோபத்தை எழுத்து மூலம் வெளிபடுத்தியதால் கிட்டிய நண்பர்கள்,முகநூலில் கிடைத்த தோழமைகள், உதவிகள்,  இப்படி எல்லாம் நிறைந்துள்ளது என் வாழ்க்கை.
    தனியாளானான பேருந்துப்பயணம், அதிகாலை கடற்க்கரை, வழி தெரியா சாலையில் தனியாக அலைந்தது, கதை  எழுதுபவன் எனும் பொய்யான அடையாளத்தைகொண்டு சிற்ப கலைஞன் ஒருவரின் கதை கேட்டது, யாரிடமும் சொல்லாமல் இரண்டு நாள் முழுதும் தனியாக திருவனந்தபுரம் சாலைகளில் அலைந்து திரிந்தது கையில் காசு இல்லாமல் பட்டினியாய் அலைந்தது,கையில் இருக்கும் காசுக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கியது. வைசாலி படம் பார்ப்பதற்காக தியேட்டர் வாசலில் ஒருநாள் முழுவதும் காத்துக் கிடந்தது இப்படி நானாய் வாழ்ந்த சில தருணங்கள் நியாபக இடுக்குகளில் படிந்தே கிடக்கின்றன. மிகுதியனா தருணங்களில் நானும் ஓட்ட பந்தய குதிரையாய் எதற்கு ஓடுகிறேன் என தெரியாமல்  ஓடிகொண்டேயிருந்தேன்.  அறை சுவர்கள் என்றைக்கும் கழுத்தை நெரித்து கொண்டே இருக்கின்றன, நான் காதலித்த தனிமை மிக பெரிய எதிரியாக நிற்கிறது
தனிமையின் வலியை உணர்த்துவதற்கு பெரிதாக எதுவும் தேவை இல்லை,பழைய நினைவுகளே போதும். எல்லாவற்றுக்கும் ஏங்கி ஏங்கியே இருபத்தி இரண்டு வருடம் முடிய போகிறது. இருந்தும் இந்த கேரள மண் மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு விடியலும் ஏதோஒன்றை மறைத்து வைத்தே விடிகிறது.எத்துனை விதமான மனிதர்கள்,  எத்துனை  கனவுகள் , நினைவுகள் பசுமையானவை விரும்பும்போது மீட்டெடுக்க நமக்காய் என்றும் காத்துகிடப்பவை.சில நினைவுகள் வலியை மட்டுமே மனது முழுவதும் நிரப்பினாலும் நாம் அதை மனதோடு நெருக்கமாகவே வைத்து கொள்கிறோம்.மறக்க நினைத்தாலும் அந்நினைவுகள் அடி மனதில் துடித்து கொண்டே தான் இருக்கும். உண்மையில் எந்த வலியும் மரத்து போவதோ உறங்கிபோவதோ இல்லை. நாம் தான் மறைத்து வைத்திருக்கிறோம். என்றைகாவது அது அடி மனதில் இருந்து எழுந்து மேலோங்கி நிற்கும்.நினைவுகளை மீட்டு எடுக்கும் கருவி  எதுவாக வேண்டுமெனிலும் இருக்கக்கூடும். அப்பாவின் கையைபிடித்து பள்ளிக்கு போகும் குழந்தையோ, மூட்டை தூக்கும் கிழவனோ, மீதி இருக்கும் உயிரை மட்டும் இறுக்கி பிடித்து சாலை ஓரத்தில்  உறங்கிகொண்டிருக்கும் மனிதனோ, வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி பார்வையிலிருந்து கடைசி துளியாய் கரையும் வரை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்து செல்லும் குடும்பமோ இல்லை.நீண்ட நாள் கழித்து கையில் அகப்பட்ட அந்த புத்தகம். பழைய புத்தகங்களை, பழைய  பரிசுகளை  மீண்டும் மீண்டும் அரவனைதுக்கொள்வது   ஒரு அழகியல் என்றாலும் கூட என்றைக்கும் அது மகிழ்ச்சியை மட்டும் தருவது இல்லை. நம்மால்  மட்டுமே உணர கூடிய புன்னகையுடன்  ஒரு சில கண்ணீர் துளிகளையும் பரிசாக தருகிறது

தீபாவளி என்றுமே ஒரு பசுமையான நினைவுகளை தந்திருக்கிறது ஒரு பத்து வருடத்திற்கு  முன்பு இருந்த தீபாவளிக்கும் இன்றைய காலகட்டத்தில் வரும் தீபாவளிக்கும் நிறையவே வித்தியாசங்கள் இந்த புதிய தீபாவளியை வரவேற்கவுமில்லை கொண்டாடவுமில்லை.

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு, 4 நவம்பர், 2018

காமத்தைப் புரிந்துகொள்


காமம். இன்று 14 வயது தொடங்கி எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக்கொண்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது. இது முற்றிலும் இயற்கையானது. 

ஆனால் இது தவறு என காலங்காலமாய் நீ போதிக்கப்பட்டிருக்கிறாய். நம் மதங்கள் பிரம்மச்சர்யத்தை மிகச் சிறப்பாய் வலியுறுத்துகின்றன.

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் மூன்றாவது ஸ்லோகத்தில் சிற்றின்பம் அநித்தியமானது என்று கூறுகிறார்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம் 

த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்

ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்

மன்ஸி விசிந்திய வாரம் வாரம்

விளக்கம் :

பெண்களுடைய மார்பகத்தையும், சிற்றிடையையும் பார்த்து வெறியுடன் மோகம் கொள்கிறாய். ஆனால் அவையெல்லாம் வெறும் சதையின் விகாரத்தால் தோன்றும் அநித்திய தோற்றம் மட்டுமே என்பதை மனதில்தினம் தினம் சிந்தனை கொள்,

பட்டினத்தாரும் கூட மங்கையரின் வாய், மயிர், கண், அங்கம், யோனி முதலிய அனைத்தும் துர்நாற்றம் வீசும் தன்மையுடையது என பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மைஇடும் கண் பீநாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்பாய்நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே?”

பாரதியும் கூட “மோகத்தைக் கொன்றுவிடு.. அல்லாள் எந்தன் மூச்சை நிறுத்திவிடு” எனப் பாடுகிறார்.

இப்படி காமத்தோடு காலங்காலமாய் நீ போரிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, கோடியில் ஒருவரால் கூட ஆதிசங்கரர், பட்டினத்தார் இன்னும் பல சித்தர்கள் கூறியதுபோல காமத்தை வெல்ல முடியவே இல்லை. இந்த கசப்பான உண்மையை நீ ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும்.


இயற்கையை எதிர்ப்பது மிக மிக முட்டாள்தனமானது. அதனோடு போரிட்டு ஜெயிப்பது என்பது இயலாது. மேல் மனதில் நீ காமத்தைக் குறித்து ஒரு அருவருப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். பிரம்மச்சர்யம் மேலானது என உன் மேல் மனதை நம்ப வைக்கலாம். ஒழுக்க விதிமுறைகளை சொல்லித்தரலாம். பிறன் மனை நோக்குதல் பாவம் என பதியவைக்கலாம்.

ஆனால் இந்த மேல்மனம் என்பது ஒட்டு மொத்த மனதில் ஒரு 10 சதவிகிதம்தான். மீதி தொன்னூறு சதவிகித அடி மனதை (Unconscious Mind) முழுக்க முழுக்க காமம் ஆட்சி செய்கிறது.

மனைவியோடு நீ காபி ஷாப் போகும்போது, எதிர் டேபிளில் ஒரு ஆழகிய பெண், தன் உடல் வடிவத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டும் டைட் ஜீன்ஸ், டீ சர்ட் உடை அணிந்து வந்தால் கண் அனிச்சையாய் அந்தப் பெண்ணை மேயத்தான் செய்யும். பெண்களுக்கும் அப்படித்தான். இது முழுக்க முழுக்க இயற்கையான அனிச்சை செயல். இப்படிச் செய்யா விட்டால் நீ ஒரு அசாதாரணன்.

இப்போது உன் ஒழுக்க விதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆனால் நீ அந்தப் பெண்ணைப் பார்க்காதது போல கபட நாடகம் ஆடுவாய். நீ ஒரு வேடதாரி. உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

இப்போது உன் மேல் மனதின் ஒழுக்க விதிகள் உன்னை குற்ற மனப்பான்மையில் ஆழ்த்தி விடும். அதற்காய் உன்னையே நீ வருத்திக்கொள்வாய்.

ஆக காமத்தைப் புரிந்து கொண்டு கடந்து சென்று விடுதலே நன்று.

ஒரு ஜீவனில் அதன் உயிரோட்டத்திற்கு அடிப்படையாக உள்ள ஜீவவித்துக் குழம்பு, இன்னொரு ஜீவனை உருவாக்க எத்தனிக்கிறது. இந்த எத்தனிப்பு உணர்வே காமம். இதைப் பற்றி உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி “அர்த்தமுள்ள அந்தரங்கம்” என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

“என்னதான் மனித சமுதாயத்தின் வாழ்வியல் தேவைக்காக ஆணும், பெண்ணும் பாலியல் ஒழுக்கங்களைக் கடைபிடித்தாலும், மரபணுக்களைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சமாச்சாரமே அதற்குத் தெரியாது. மரபணுவிற்குத் தெரிந்ததெல்லாம் தன்னைத் தானே முடிந்தமட்டும் அதிகமாக மறுமைக்கு கொண்டு போவதுதான். இதனால் அவை ஆண்களில் கூடுமானவரை அதிகப் பெண்களோடு கூடி வேகவேகமாக இனத்தைப் பெருக்கிவிடும் உத்வேகத்தைத் தூண்டுகின்றன. இதுவே பெண்களில் முடிந்த மட்டும் விதம்விதமான ஆண்களோடு கூடி மரபணுக்களை அபிவிருத்தி செய்து, தரத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தூண்டுகின்றன. இந்த மரபணுவின் வேக இனப்பெருக்கம், தரமான இனப்பெருக்கம் ஆகிய இரண்டு தூண்டுதல்களும் ஆணையும், பெண்ணையும் திருமணத்திற்கு வெளியே உறவு மேற்கொள்ளவும் உந்தின.” ஆக காமம் மரபணு சம்பந்தப்பட்டது.

இத்தகைய காமத்தோடு காலங்காலமாய் போரிட்டு நீ கண்ட பலன் என்னவென்றால் நீ ஒரு கபட வேடதாரியாக மாறியதுதான். ஒரு சமுதாயம் முழுக்க பொய் முக மூடி போட்டுக்கொண்டே அலைகிறது. உன்னை ஒழுக்கமானவனாகக் காட்டிக் கொள்ள நீ பற்பல முயற்சிகளை மேற்கொள்கிறாய். அன்றாட வாழ்வில் சமுதாயத்தில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கும், மனிதனின் காமத்திற்கு எதிரான போருக்கும் மிகப்பெரிய தொடர்பிருக்கிறது.

உதாரணமாய்…….

இன்று தெருவில் யாரோ ஒரு ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக என் அருகில் நின்ற இரு பெண்கள் வதந்தி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத போதும் ஏன் இப்படி வாய் கூசாமல் பேசுகின்றனர்? இது எப்படி சாத்தியமாகிறது? காலங்காலமாய் காமத்தை தவறு என செய்த போதனையின் விளைவுதான் இந்த வதந்திப் பேச்சு.

ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தாலே “அவங்க ரெண்டுபேருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கு” என இருட்டுக்கடை திருநெல்வேலி அல்வா இலவசமாய் கிடைத்தது போல வதந்தி பேசி இன்புறுகிறாய். உண்மையில் இப்படி வதந்தி பேசுவதென்பது உன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வக்கிரக் காமத்தின் வெளிப்பாடு.

நீ சொல்வது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அது அவர்கள் பிரச்சனை. உனக்கு என்ன நஷ்டம்? அதனால் வரும் விளைவுகளுக்கு அவர்கள் தானே பொறுப்பு. அதை நீ ஏன் பெரிதுபடுத்திப் பேசுகிறாய்? சற்று யோசித்துப் பார். உன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின், பொறாமையின் வெளிப்பாடுதான் இது. உண்மையில் உன் அடிமனதில் பற்பல வக்கிரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை உனக்கு ஒரு குற்ற உணர்வைத் தருகின்றன. நீ வெளிப்பட்டு விடுவாயோ என்ற பயம் உன்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. உன் குட்டு உடைந்து விடுமோ என அஞ்சுகிறாய். அடுத்தவனை இப்படிப் பேசுவதன் மூலம் உன் அசிங்கங்களை மறைக்க முயலுகிறாய்.

நீ ஒழுக்கமானவன் என காட்டிக் கொள்ள கடும் முயற்சி செய்கிறாய். உண்மையில் உன் மனதில் யாருக்கும் தெரியாமல் நடந்த கற்பழிப்புகள் எத்தனை எத்தனை? உடலளவில் இல்லையெனினும் மனதளவில் நீ எத்தனை பேரோடு உறவு கொண்டிருக்கிறாய்? இந்த உண்மைகளை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனே, “நான் ஒரு ஏக பத்தினி விரதன்/விரதி. இந்த இப்பிறவிக்கு இரு மாதரை/ஆடவரை சிந்தையாலும் தொடேன்” என வசனம் பேசுவாய். காமத்தில் நிறைவு அடையாத ஒருவரால் தான் இப்படி யாரைப் பார்த்தாலும் தவறாகப் பேச இயலும்.

இது போல சமுதாயத்தின் பற்பல பிரச்சனைகளுக்கும் மிகப்பெரும்பாலும் அடிப்படைக் காரணமாய் இருப்பது காமமே

காமம் கடந்து விட்ட ஒருவனுக்கு, இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவன் யாரையும் தவறாகக் கருதுவதேயில்லை. காமத்தை இயற்கையானது என ஏற்றுக்கொள்ளாமல், அதை எதிர்த்துப் போரிடுவதால், கபட நாடகமாடும் இத்தகைய மிக இழிவான மனநிலையைத்தான் நீ பெற்றிருக்கிறாய். இதுவே பன்நெடுங்கால போதனையின் விளைவு.

ஓஷோ இத்தகைய கபட வேடதாரிகளைப் பற்றியும், அவர்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தில் மிக விரிவாகப் பேசுகிறார்.

நான் இப்போது உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். முதலில் உன்னை நீ முழுமையாக ஏற்றுக்கொள். என்னுள் காமம் இருக்கிறது என ஒத்துக்கொள். அது இயற்கையானது என உணர்ந்துகொள். அந்த வக்கிரக் காமத்தோடு உன்னை நீயே அங்கீகரித்துக் கொள். கபட வேடம் போடுவதை நிறுத்து. உன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் முட்டாள் தனமான முயற்சியைக் கைவிடு. பிறகு காமத்தை கடப்பது இலகுவாகும். அதற்கான வழி உன்னுள்ளேயே ஒளிரத் தொடங்கும். உன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்.

வெள்ளி, 2 நவம்பர், 2018

இயற்கை மருந்து

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு  எள்ளெண்ணை

உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

வழித்தடங்கள்

தமிழன் காசி அவர்களின் கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதை



முன்னால் செல்லுங்கள் ..
வழித்தடங்களை மறந்தவர்கள்   பின்னால் வருகிறோம்...

பாதையை மட்டுமல்ல
உங்களை போன்ற சிறப்புமிக்க வாழ்க்கை பயணத்தையும் தொலைத்தவர்கள் நாங்கள் ...



விடியசொல்லி கோழிகூவும் முன் விழித்துகொண்டவர்கள் நீங்க ...
அலாரத்தின் அலரல் சத்தத்தையும்  அலட்சியபடுத்திய உறக்கத்தில் நாங்க...

ஆடு மாடுகளோடு அடுத்தவங்க உணவுக்காக உழைச்சவங்க நீங்க...
ஆடு மாடுகளை உணவாக்கி உண்பதையே வேலையாக்கிட்டவங்க நாங்க...

அரை கோவணத்துடன் அடுதவர்களுக்காக  உங்களை நெய்துக்கொண்டவர்கள் நீங்க...
அடுத்தவர்களின் கோவணத்தையும் உறுவி அம்மணமாக்கி ஆனந்தபடுபவர்கள் நாங்க ... 

அன்பு ,பண்பு,பாசம் ,என அனைத்தையும் கலந்து கூட்டாக வாழ்ந்தவங்க நீங்க...
ஆத்தா அப்பனை அனாதையா விட்டுபுட்டு அடுக்குமாடி கூட்டுக்குள்ள அல்லல்படுகிறதை வாழ்க்கையாக்கிக்கிட்டவங்க நாங்க... 

பெத்த பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் தோள்பட்டைக்கு மேலே தூக்கி உண்மையான உலத்தை காட்டியவங்க நீங்க...
தள்ளியிருக்கும் அறைக்குள்ளே தன்னந்தனியாக பிள்ளைகளை கணினியில் உலகத்தை காண வச்சவங்க நாங்க ... 

உறவினரும் , ஊரும் வீடுமுதல் வீதி வரை ஒன்றுகூடி பத்தலிட்டு ,பலகாரம் செய்து  திருமணங்களை விழாவாக கொண்டாடியவங்க நீங்க...
ஓட்டலில் ஒதுக்கிதந்த ஒர்ரிடத்தில் அதிகபடியாக ஐம்பது பேரோடு கல்யாணம் முடிச்சவங்க நாங்க... 

விருந்து வைபவங்களை வீதிமுழுக்க பந்தி விரித்து ஓடியாடி பரிமாறி உண்டுமகிழ்ந்தவங்க நீங்க...
வரிசையில தட்டேத்தி வச்சதை வாங்கிக்கொண்டு ஓரமா நின்னபடி சாப்பிடட்டவங்க நாங்க... 

கைத்தொழில், விவசாயம்னு படிக்காத விஞ்ஞானிகள் நீங்க...
கான்வென்ட் கல்விபடிச்சி காசுக்காக ஐடி ஃபீல்டுல அடிமையானவங்க நாங்க...

நின்று நிதானமா நடந்து கால்தேய்து பாதுகாப்போடு பாதையமைச்சு பலர் பயணிக்க உதவியவங்க நீங்க...
காரில் வந்து பாதைமறைத்து கட்டடம்கட்டி வழிமறித்து வெளிவரமுடியாமல் பரிதவிக்கிறவங்க நாங்க...  

கடைசி கால இறப்பன்று ஊர்கூடி ஒப்பாரி வைத்து சுடுகாடு வரை சுமந்து சென்றவர்கள் நீங்க...
அடுத்த வீட்டுக்கும் தெரியாமல் அமைதியாக அமரர் ஊர்தியில் அனாதையாக போகபோறவங்க நாங்க...

முன்னால் செல்லுங்கள்...
வழித்தடங்களை மறந்தவர்கள்
பின்னால் வருகிறோம்...