தற்சிறப்புப் பாயிரம்
கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்து, அசை, சீர்
பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே! 1
அவையடக்கம்
தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே. 2
சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம், பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. 3
உறுப்பியல்
எழுத்து
குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே
மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும்
சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைஇய நுண்ணிடையாய்
அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே. 4
அசை
குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று
அறிவேய் புரையுமென் தோளி உதாரணம்ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே. 5
சீர்
ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம்
நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப
வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. 6
வாய்பாடு
தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்
நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே. 7
தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால்
எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும் இனியவற்றுட்
கண்ணிய பூவினங் காய்ச்சீ ரனைய கனியோடொக்கும்
ஒண்ணிழற் சீரசைச் சீரியற் சீரொக்கும் ஒண்தளைக்கே. 8
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக்
கொன்று முதாரணம் பூந்தா மரையென்ப ஓரசைச்சீர்
நன்றறி வாரிற் கயவரும் பாலொடு நாலசைச்சீர்க்
கன்றதென் னாரள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே. 9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக